Friday, December 30, 2022

நள்ளிரவில் கோயில் நடைதிறப்பது நியாயமா ? இரவு 12


Thank Fb Veeramani
படித்தேன் ; பகிர்ந்தேன் .

நள்ளிரவில் கோயில் நடைதிறப்பது நியாயமா ? இரவு 12 மணிக்கு ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில் கதவுகள்  திறக்கப்படுகின்றன . இந்த நள்ளிரவு நாடகம் நியாயமா ? 

நன்றி ---BALA. GAUTHAMAN,Vedic Science Research Centre

இரவு 12 மணிக்கு ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில் கதவுகள்  திறக்கப்படுகின்றன . இந்த நள்ளிரவு நாடகம் நியாயமா ? 

இதற்குச் சமய ஆகமங்கள் சம்மதிக்கின்றனவா? ஆகம விதிகளைத் தளர்த்தும் அளவிற்கு இந்த நிகழ்வில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா? 

இந்தக் கேள்விகளுக்கு விடைகாண, நம் ஆலய வழிபாட்டு முறையை விவரிக்கும் ஆகமங்கள், பூஜை நேரத்தை எப்படி நிர்ணயம் செய்துள்ளது என்பதைப் பார்ப்போம். 

கோயில்களில் தினம் தோறும் செய்யப்படும் பூஜைகள் நித்தியக் கிரியை என்றும், விசேஷமாக நடத்தப்படும் பூஜைகள் நைமித்திக பூஜைகள் என்று ஆகமங்கள் குறிக்கின்றன. இதில் நித்திய பூஜைகள் எந்தக்காலத்தில் நடத்தப்படவேண்டும் என்று ஆகமங்கள் தெளிவாக விளக்கியுள்ளன. 

உஷத்காலம் : சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி, சூரிய உதயம் வரை உள்ள காலம். சூரிய உதயம் 6 மணி என்றால் அதிகாலை 4.30 முதல் 6 மணிவரை உஷத்காலம் (ஒரு நாழிகை 24 நிமிடங்கள்) 

கால சந்தி : சூரியோதையம் முதல் 10 நாழிகை வரை கால சந்தி. சூரிய உதயம் வரை உள்ள காலம். சூரிய உதயம் 6 மணி என்றால் காலை 6 முதல் 10 மணிவரை கால சந்தி. 

உச்சிகால : சூரியன் உச்சத்தில், அதாவது தலைக்கு நேர்மேலே இருக்கும் காலம் பொதுவாக மதியம் 11.30 முதல் 12.30 வரை உள்ள காலம் உச்சி காலம். இந்தப் பூஜைக்குப் பின் கோயில் நடை அடைக்கப்பட வேண்டும். 

சாயரக்‌ஷை : சூரிய அஸ்தமனத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலம். சூரிய அஸ்தமனம் 6 மணி என்றால் மாலை 4.30 முதல் 6 மணிவரை சாயரக்க்ஷை. 

இரண்டாம் காலம் : சூரிய அஸ்தமனம் முதல் மூன்றே முக்கால் நாழிகை வரை உள்ள காலம். சூரிய அஸ்தமனம் 6 மணி என்றால் மாலை 6 முதல் 7.30 மணிவரை சாயரக்க்ஷை. 

அர்த்த யாமம் : கோயில் நடை அடைப்பதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி கோயில் நடை அடைப்பதுடன் முடிவடையும். இந்தக் காலம் இரவு 7.30 முதல் 9 வரை. 

இந்தக் காலங்கள் காமிக ஆகமம் மற்றும் பல ஆகமங்களில் குறிக்கப்பட்டுள்ளன. ஆகம விதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயில்களில், இந்த விதிகளின்படியே பூஜைகள் நடத்தப்படவேண்டும். 

கால நேரம் தவிர, இறைவனுக்குப் படைக்க வேண்டிய நைவேத்யம், அர்ச்சிக்க வேண்டிய மலர்கள், அபிஷேகிக்க வேண்டிய திரவியங்கள் என்று அனைத்துமே ஆகமங்கள் தெளிவாக விளக்கியுள்ளன.

 சித்திரை முதல் பங்குனி வரை இறைவனுக்குப் பயன்படுத்த வேண்டிய மலர்களைப் புட்பவிதி என்ற நூலில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப் பிரகாசர் குறிப்பிட்டுள்ளார். இவரது சீடர் குரு ஞான சம்பந்தரே தருமபுர ஆதீனத்தை ஸ்தாபித்தார். 

காலையில் 4.30 க்குத்தான் கோயில் நடை திறக்கப்பட வேண்டும், இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட வேண்டும் என்பது ஆகம விதி. 

இந்த விதியை மீறி தமிழ்ப்புத்தாண்டான சித்திரை ஒன்றை வரவேற்கக்கூட கோயில் நடையை நாம் உஷத்காலத்திற்கு முன் திறப்பதில்லையே! 

இந்த விதியை மீறி, கிறிஸ்தவப் புத்தாண்டிற்கு இரவு 12 மணிக்கு கோயில் நடை திறப்பது நியாயமா?

 அர்த்த யாம பூஜை முடிந்தபின், இறைவனை சிவிகையில் சுமந்து, கோயிலை வலம் வந்து பள்ளியறையில் அம்மையின் அருகில் கொண்டு அமர்த்தியவுடன், அம்மன் சன்னிதியைத் திரையிட வேண்டும். திரையிட்டபின் பள்ளியறை பூஜை, பால், பால் பாயாசம், வடை நைவேத்தியத்துடன் செய்யப்பட்டு, தாம்பூலம் சமர்ப்பிக்கப்படும். அது சமயம் தோத்திரப் பாடல்கள் பாடி, வாத்தியம் இசைக்கப்படும். அதன் பின் பள்ளியறைக்கதவுகளை சிவாச்சாரியார் மூடி அந்தச் சாவியை பைரவர் சன்னிதியில் கொண்டு சமர்பிப்பார். பின்னர் கோயிலை மூடி சாவியை வாயில் காப்பாளரிடம் கொடுப்பார். 

இது போலவே கோயில் நடையைத் திறக்கும் விதியும் ஆகமங்களில் திட்டவட்டமாகக் குறிக்கப்பட்டுள்ளது. சிவாச்சாரியார் காலையில் எழுந்து நீராடிவிட்டு, தனது அனுஷ்டானங்களை முடித்துவிட்டு ஆலயம் செல்ல வேண்டும். துவாரபாலர் மற்றும் நந்தி தேவரைப் பிரார்த்தனை செய்து அனுமதி பெற வேண்டும். அதன் பின் சகளீகரணம் செய்து, சாமான்யார்க்யம் கூட்டி அந்த நீரைத் தன் மீதும் பூஜா பொருட்கள் மீதும் தெளித்து சுத்தி செய்த பின்னரே சிவாச்சாரியார் பூஜை செய்யும் தகுதியைப் பெருகிறார். 

தகுதிபெற்ற சிவாச்சாரியார் காப்பாளரிடம் சாவியை வாங்கி கோயிலைத் திறந்து, பைரவர் சன்னிதிக்குச் சென்று, பொரி நைவேத்யம் செய்து பள்ளியறைச் சாவியை முத்திரையால் எடுக்கவேண்டும். அதன்பின் எல்லா சன்னிதிகளையும் திறக்கவேண்டும். திறந்தபின் பள்ளியறைக்குச் சென்று வாத்திய கோஷங்கள் முழங்க திருப்பள்ளி எழுச்சி பாடவேண்டும். 

அச்சமயத்தில் சிவாச்சாரியார் துவார பூஜை செய்து காலகாலனின் அனுமதியைப் பெறவேண்டும். திறவுகோல் நுழையும் துவாரத்தை பிந்துவாக நினைத்து அர்ச்சனை செய்து திறவுகோலை நாத வடிவமாக நினைத்து சிவ சக்தி மந்திரம் சொல்லிக்கொண்டு பள்ளியறைக் கதவைத் திறக்க வேண்டும். 

திறந்தபின் புனிதமான தீர்த்தத்தை தெளித்து நிர்மால்யம் களைய வேண்டும். அதன் பின் பாவனையால் இறைவனை ஸ்நானம் செய்வித்து அது தொடர்பான சடங்குகளைச் செய்து, இறைவனை வெளியே எடுத்துவர அனுமதி கோரி நிற்கவேண்டும். பின்னர் இறைவனை சிவிகையில் ஏற்றி கோயிலை வலம் வந்து மூலவர் அருகில் வைத்து, பூவை எடுத்து மூலவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் உஷத்கால பூஜை செய்யவேண்டும். 

காலையில் கோயிலைத் திறக்கும் கால நிர்ணயத்தைவிட, அதைத் திறக்கும் விதியும், நடை அடைக்கும் விதியும் பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைந்துள்ளன. இவைகள் அனைத்தையும் மீறுகிறது நள்ளிரவில் நடை திறக்கும் ஆங்கில மோகம். 

ஆகம விதிகளை, ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களில் மீறுவது மகா பாபமாகும். இந்தப் பாவத்திற்கான அபராதங்கள் மிகக்கடுமையானது மட்டுமல்ல அது நாட்டிற்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்பதையும் ஆகமங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. 

நம்மைப் பொருத்தவரை வேத, ஆகம விதிகளே இறுதியானது. 

ஆகமங்கள் மட்டுமின்றி, மருத்துவவ ரீதியாகவும் இந்த நள்ளிரவு நடை திறப்பு உகந்தது அன்று. 

சீன மருத்துவ முறையில், நம் உடலின் உறுப்புகள் அதிக ஆற்றலுடன் இயங்கும் நேரம், குறைந்த ஆற்றலுடன் இயங்கும் நேரம் என்று உறுப்புக்களின் இயக்கம் பற்றியும் அதை வைத்து மருத்துவம் செய்யும் முறையும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சீன உடல் உறுப்பு கடிகாரம் (Chinese organ body clock) ஒரு நாளை 12 ஆகப் பிரித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு உடல் உறுப்பு ஆதிக்கம் செலுத்தும் என்றும், அந்த உறுப்பையும், ஆதிக்கம் செலுத்தும் நேரத்தையும் குறிப்பிட்டுள்ளது. 

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல் ஆற்றல் மிகுந்து இயங்கும் நேரம். இந்த நேரத்தில் நுரையீரலிலிருக்கும் நச்சுத்தன்மையான கழிவுகள் தளரும். இந்நேரத்தில் பிராண சக்தியை உடலுக்குள் சேகரித்தால், உடலுக்கு நன்மை பயக்கும். எனவே மூச்சுப் பயிற்சிக்கு இது உகந்த நேரமாகும். காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடலின் நேரம். உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற, குடலை இயக்கச் சரியான நேரம் இது. இந்த நேரத்தில் குளித்தல், தண்ணீர் குடித்தல் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். 

இந்த முதல் நான்கு மணி நேரத்தில் தான் ஆலயம் திறக்கப்பட்டு, தியானம், மூச்சுப்பயிற்சி, சந்தியாவந்தனம் போன்ற கர்மாக்களும் செய்யப்படுகின்றன. இரவு 9 முதல் 11 மணி வரை நாளமில்லா சுரப்பிகளின் (endocrine/ triple warmer) செயல்பாடு ஓங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்கினால், உடல் ஆற்றலைச் சேமிக்க உதவிகரமாக அமையும். 

இதன் பின் வரும் 2 மணி நேரங்கள் அதாவது இரவு 11 முதல் 1 மணி வரை பித்தப்பையின் நேரம் அதன்பின் வரும் 2 மணி நேரம் அதாவது இரவு 1 முதல் 3 வரை உள்ள நேரம் கல்லீரலின் ஆதிக்கம் மிகுந்த நேரம். இவ்வேளைகளில் தூங்காமல் இருந்தால் பித்தப்பை இயக்கக் குறைபாடு மற்றும் இரத்த சுத்திகரிப்பில் பாதிப்பு ஏற்படும். இதனால் மறு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. 

இந்த இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலான நேரம், பள்ளி அறை பூஜையுடன் நாள் முடிவுக்கு வந்தபின், உறக்கத்தை இன்றியமையாததாகக் காட்டுகிறது. 

நம் ஆகமங்களில் சொல்லப்பட்ட விதிகளைக் கடைபிடித்தால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம் என்பதை வழிமொழிகிறது சீன மருத்துவம். இதில் ஆச்சரியமொன்றுமில்லை, இந்தச் சீன மருத்துவத்தை வளர்த்த சித்தர் போகர்தானே பழனி மலையில் முருகனை ஸ்தாபித்தார். 

விஞ்ஞானமும், மெஞ்ஞானமும் உஷத்காலத்தில் ( அதிகாலை 4.30-6.00) தான் கோயில் நடை திறக்க வேண்டும், அர்த்தஜாமத்தில் (இரவு 9 மணி) கோவில் நடை அடைக்கப்பட வேண்டும். அர்த்த ஜாமத்திற்கும், உஷத்காலத்திற்குமிடையே எந்தச் செயல்பாடும் கூடாது என்று அறுதியிட்டுக் கூறியபின் நள்ளிரவில் கோயிலைத் திறந்து வழிபாடு நடத்துவதும், பூஜைகள் செய்வதும் நியாயமா? 

சூரியனின் இயக்கத்தையும், சந்திரன் மற்றும் கோள்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் பூர்வமாகக் காலத்தை கணிக்கும் நாம், எந்த அறிவியல் அடிப்படையுமின்றி, மதத்தின் அடிப்படையில் மட்டுமே அனுசரிக்கப்படும் புத்தாண்டிற்காக ஒரு புகழோங்கிய பாரம்பரியத்தை பலி கொடுப்பது நம் பண்பாட்டையும், மேன்மையையும் அழிப்பதற்கு ஒப்பாகாதா?

நன்றி ---BALA. GAUTHAMAN,Vedic Science Research Centre

அன்பர்களே,இப்பதிவு ஆங்கிலப்புத்தாண்டன்று திருக்கோயில் நடைதிறப்பது பற்றிய பதிவு ஆகும். மகாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி ஆகிய சிறப்பு நாள்களில்  ஆகமங்கள் விதித்தவாறு பூஜைகள் நடைபெறுவது கண்கூடு.

No comments:

Post a Comment